1981
மாண்புமிகு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத் தமிழ்ச் சங்கம் இயங்கும் என 1981ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் அறிவிக்கப்பெற்றது.
மதுரையிலுள்ள தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலம் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென ஒதுக்கப்பெற்றது.
1986
1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் மதுரை, மருத்துவக் கல்லூரி மைதானத்தில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பெற்றது. இசையரங்கு, ஆடலரங்கு, பாட்டரங்கம், வில்லிசை, இன்னிசை, கருத்தரங்கம் முதலான பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பெற்றது.
2010
2010இல் மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ‘தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட ஆணையிட்டு, அதற்கென ரூபாய் 100 கோடியினை ஒதுக்கீடு செய்து 09.2010 அன்று தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை (தவ2-2) அரசாணை நிலை எண்.380 வெளியிடப்பெற்றது. தொடர்ந்து, ‘உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்று பேரவை மற்றும் நிருவாகக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பெற்று 21.10.2010 அன்று தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை (தவ2-2) அரசாணை (நிலை) எண்.415 வெளியிடப்பெற்றது.
2012
“உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் புதுப்பொலிவோடும் சிறப்போடும் செயற்படும்” என 2012ஆம் ஆண்டு மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பெற்றது. 07.2012அன்று தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை (தவ2-2) அரசாணை நிலை எண்.234 வெளியிடப்பெற்றது. இதற்கென அலுவலக அமைப்பு தோற்றுவிக்கப்பெற்று, தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பெற்றது.
2014
2012ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியரகத்தின் பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தில் அறை எண்.6இல் இயங்கி வந்தது. பின்பு 2014ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் முதல் மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள காவியன் பிளாசா என்ற வளாகத்தில் மூன்றாவது தளத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது.
2015
09.2015அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை (தவ2-2) அரசாணை நிலை எண்.160இன் படி தனி அலுவலர் பணியிடம் இயக்குநர் பணியிடமாக நிலை உயர்த்தப்பெற்று ஆணையிடப்பெற்றது.
2016
2016ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் முதல் நாளன்று (01.03.2016) உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம் மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.15ஏக்கர் நிலத்தில் 87,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பெற்று மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் காணொளி வாயிலாகத் திறந்து வைக்கப்பெற்றது. 01.03.2016 முதல் பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.