உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பெற்றது.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் 2010இல் உலகத் தமிழ்ச் சங்கம் “தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்” என்ற பெயரில் செயற்படும் என அறிவித்து அதற்கென ரூபாய் 100 கோடியினை ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது.

ஆட்சி மாற்றத்தினால் 2012இல் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை என்ற பெயரில் செயற்பட ஆணையிடப்பட்டு. மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 37.25 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு 01.03.2016 அன்று அந்நாளைய தமிழ்நாட்டின் முதல்வரால் காணொளி வாயிலாகத் திறந்து வைக்கப்பெற்றது.

 

 

 

 

 

 

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975இன்படி. மதுரை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்னர். செப்டம்பர் திங்களுக்குள் ஓராண்டிற்கான வரவு செலவு அறிக்கையினைத் தணிக்கை செய்து. பொதுக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பின்னர் மாவட்டப் பதிவாளரிடம் தாக்கல் செய்து, சங்கத்தின் பதிவினை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.

ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாகப் பொதுக் குழு நடத்தப்பெறாத காரணத்தால். சங்கம் புதுப்பிக்கப்பெறாமல் இருந்தது.

தமிழ்நாடு அரசு அலுவலங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிருவாகம் சிறப்பாகவும் தொய்வின்றியும் நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராக திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், 2023ஆம் ஆண்டு மே திங்களில் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பெற்றது.

அதில், உலகத் தமிழ்ச் சங்கம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை அறிந்து, உலகத் தமிழ்ச் சங்கத்தினை ஆய்வு செய்யும் வகையில் செப்டம்பர் திங்கள் நேரடியாக மதுரைக்கு வருகை புரிந்து உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சங்கப் பதிவினைப் புதுப்பித்தல் தொடர்பாகவும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-2024ஆம் ஆண்டிற்கான “இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை 2023 திசம்பர் திங்களில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்தபோது மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வருகை தந்து, சங்கப் புதுப்பித்தல் தொடர்பான பணிகளின் நிலையினைக் கேட்டறிந்து, விரைந்து சங்கப் புதுப்பித்தல் பணியினை நிறைவேற்ற வேண்டுமென நேரில் வலியுறுத்தினார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தொடர் அறிவுறுத்தலின்பேரில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ), முனைவர் ஔவை அருள் அவர்களின் முயற்சியால் எட்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த உலகத் தமிழ்ச் சங்கம், 10.07.2024 அன்று புதுப்பிக்கப்பெற்றது.

சங்கப் பதிவுச் சட்டத்தின்படி, 10 ஆண்டுகள் சங்கம் புதுப்பிக்கப்பெறவில்லை எனில், சங்கப் பதிவிலிருந்து சங்கம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பெறும்.

இதன் அடிப்படையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பதிவும் நீக்கம் பெறும் நிலையில் இருந்தது.

புதுப்பித்தலின் மூலம் உலகத் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து இயங்கும் வகையில் தங்க வைக்கப்பெற்றுள்ளது.

இயக்குநர்.
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Previous Hello world!

Leave Your Comment

Connect With Us

மருத்துவர் தங்கராசு சாலை, சட்டக் கல்லூரி அருகில், மதுரை – 625020

Ulaga Tamil Sangam, Madurai © 2024. All Rights Reserved