சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டிருந்த சங்கத் தமிழர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் இன்றைய தலைமுறையினரும் இனிவரும் தலைமுறையினரும் அயல்நாட்டினரும் கண்டு தெளியும் வகையில், மதுரையில், 58 செண்ட் நிலப்பரப்பில் ஏறத்தாழ ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு, முல்லைக்குத் தேர் தந்த பாரி; கரிகாலனின் நீர் மேலாண்மை; ஒக்கூர் மாசாத்தியாரின் போர்க்களக் காட்சி ஆகிய 3 புடைப்புச் சிற்பங்களும் தொல்காப்பியர் உள்ளிட்ட 12 மாணவர்களுக்கு அகத்தியர் பாடம் நடத்தும் காட்சி; பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை இருவரையும் கபிலர் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காட்சி; ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானை அவரது அரசவையில் பாராட்டுதல் ஆகிய 3 சிற்பக் காட்சிகளும் மன்னர் புலவருக்குப் ‘பொற்கிழி’ வழங்கும் 1 கற்சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்குரிய காட்சிகள்; சங்கத் தமிழரின் வீரத்தின் மாண்பையும் தொழில்நுட்ப அறிவையும் சுற்றுச்சூழல் பேணும் உயர்வையும் தன்மானச் சிறப்பினையும் காதல் பெருமையையும் வணிக முறையையும் எடுத்துரைக்கும் ஓவியங்கள் எனக் கலைப் பொருள்களின் கூடமாக விளங்குகிறது சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்.

மேலும், சங்க இலக்கியக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில், 2022ஆம் ஆண்டு சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் வரையப்பெற்ற ஓவியங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பெற்றது. தன்னார்வ அடிப்படையில் மாதந்தோறும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையில், இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வாழ்வியல் விழுமியங்களிலும் உலகம் வியக்கவும் உலகினர் பின்பற்றவும் தமிழரின் தலைமுறை பெருமிதம் கொள்ளவும் செம்மாந்த வாழ்வு வாழ்ந்த சங்கத் தமிழரின் வாழ்வியலைக் கண்முன் நிறுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ள காட்சிக்கூடம் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பெறுகிறது.

Connect With Us

மருத்துவர் தங்கராசு சாலை, சட்டக் கல்லூரி அருகில், மதுரை – 625020

Ulaga Tamil Sangam, Madurai © 2024. All Rights Reserved