

உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை
“புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்!"
– முத்தமிழறிஞர் கலைஞர்
“தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன்; இசையில் இனிய ஊற்று; நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி!”
– பேராசிரியர் க. அன்பழகன்
ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளாக விழிப்புடன் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கி வரும் ஒரு நகரம் மதுரை மாநகரம். எண்ணிலடங்காச் சிறப்புகளைத் தன்னகத்தே பெற்ற மதுரையில் மேலும் ஒரு தனிச்சிறப்பாகத் திகழ்கின்றது ‘உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை’. கலையரங்கம், கூட்ட அரங்கங்கள், நிருவாகப்பிரிவு, ஆய்வுப்பிரிவு, நூலகம், வகுப்பறைகள், கருத்தரங்க அறை, குழுக்கூட்ட அரங்கம், விருந்தினர் தங்கும் அறைகள் எனப் பல வசதிகளுடன் 14.15 ஏக்கர் நிலப்பரப்பில் 87,300 சதுரஅடியில் அமையப்பெற்றுள்ளது. முன்பக்கச் சுற்றுச்சுவர் ஐயன் திருவள்ளுவனின் 1330 குறள்களையும் தாங்கி நிற்கின்றது.
உயிர் நாவில் உருவாகிய உலகமொழி நம் செம்மொழியான தமிழ்மொழி. அம்மொழி செம்மாந்து உலக அரங்கில் நடைபோட எண்ணற்ற பணிகளை ஆற்றிவரும் உலகத் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் முகமாகத் திகழும் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று, 2012இல் புதுப்பொலிவூட்டப் பெற்றது.
அறிவு செழிக்க அறிவுக் கோட்டமாகத் திகழ்கின்றது ‘உலகத் தமிழ்ச் சங்க நூலகம்’. 27,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் ரூபாய் 21 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பெற்று புதுப்பொலிவுடன் செயற்பட்டு வருகின்றது.